பதக்கம் பெற்ற மறுநாள் கொல்லப்பட்டவர்: மனிதாபிமானத்தால் உயிர் இழந்த ராணுவ அதிகாரி

புதுடெல்லி, ஜன.30-

வீர தீர செயலுக்காக குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட யுத் சேவா பதக்கம் பெற்றவர்களில் ராணுவ கர்னல் முனிந்திர நாத் ராயும் ஒருவர். அவர், மென்மையான இதயம் கொண்ட துணிச்சலான அதிகாரி என்று பெயர் பெற்றவர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெள்ளத்தால் தத்தளித்தபோது, துணிச்சலுடன் செயல்பட்டு, நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றினார். இதற்காகவே அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும், காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 50 ஆப்பிள் விவசாயிகளை சிம்லாவுக்கு அனுப்பி வைத்து, ஆப்பிள் விவசாயத்தின் லாப நுணுக்கங்களை கற்றுக் கொள்ள செய்தவர்.

இத்தகைய பின்புலம் கொண்ட கர்னல் முனிந்திர நாத் ராய்க்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டபோது, குடும்பத்தினரும், உறவினர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி, 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. மறுநாள், அதாவது 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் திரால் பகுதியில் அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2 நாட்கள் கழிந்த நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:-

திரால் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இரண்டு பேரை பிடிப்பதற்காக, கர்னல் முனிந்திர நாத் ராய் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவருக்கு உதவியாக, காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவரும் ஈடுபட்டார்.

குறிப்பிட்ட அந்த வீட்டை முனிந்திர நாத் ராயின் குழுவினர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் எங்கும் தப்பிச் செல்ல முடியாத வகையில், அனைத்து வழிகளையும் அடைத்தனர்.

ராணுவ குழுவுக்கு தலைமை தாங்கி, முன்வரிசையில் நின்றார், கர்னல் ராய். வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க அவர் தயாரானார். நடுங்க வைக்கும் அந்த குளிரில், அவரது கை விரல்கள், பனித்துளி படர்ந்த துப்பாக்கியின் விசையை அழுத்த தயாராகின.

அப்போது, அந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் கேட்டது. வீட்டுக்குள் இருந்து, தீவிரவாதியின் தந்தையான முதியவர், கூப்பிய கரங்களுடன் ஓடி வந்தார். ‘என் மகனை சுட்டுக் கொன்று விடாதீர்கள்’ என்று கர்னலின் காலில் விழுந்து கெஞ்சினார். தன் மகனை சரண் அடைய வைப்பதாக அவர் உறுதி அளித்தார்.

அப்போது, வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது அல்லது முதியவரின் கெஞ்சலுக்கு பணிந்து தீவிரவாதிகளை சரண் அடைய அனுமதிப்பது ஆகிய இரண்டு வழிமுறைகள்தான் கர்னல் ராய்க்கு இருந்தன. வேகமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார்.

அந்த இக்கட்டான நேரத்திலும், அவர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டார். முதியவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். யாரும் சுட வேண்டாம் என்று உத்தரவு போட்டார். முதியவர், வீட்டுக்குள் சென்றார். அவர் மீதான நம்பிக்கையில், கர்னல் ராய், வெளியே காத்திருந்தார். ஆனாலும், அவருக்கு ஒவ்வொரு விநாடியும் பதற்றமாக இருந்தது. மற்ற ராணுவ வீரர்கள், சண்டையிடும் நிலையில் இருந்து சகஜ நிலைக்கு மாறி இருந்தனர்.

இரண்டு நிமிடங்கள் மயான அமைதி நிலவியது. திடீரென, கதவை திறந்து கொண்டு, இரண்டு தீவிரவாதிகளும் துப்பாக்கி குண்டுகளை மழையாக பொழிந்தனர். முன்வரிசையில் நின்று கொண்டிருந்த கர்னலையும், அவருக்கு உதவியாக வந்திருந்த போலீஸ்காரரையும் குண்டுகளால் சல்லடையாக துளைத்தனர். இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். அதற்குள் சுதாரித்து கொண்ட மற்ற ராணுவ வீரர்கள், அந்த தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.

இந்த தகவல்களை ராணுவ செய்தித்தொடர்பாளர் ரோகன் ஆனந்த் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

‘முதியவரின் வேண்டுகோளை கர்னல் ராய் ஏற்றது சரிதானா?’ என்ற கேள்விக்கு ‘சரிதான். அவர் மனிதாபிமானத்துக்கு இடம் கொடுக்க விரும்பினார்’ என்று ரோகன் ஆனந்த் கூறினார். ‘இறப்புக்கு பிறகும் மக்கள் பாராட்டும்படி வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் செயல்படு’ என்பதே கர்னல் ராய் வாழ்க்கையின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, வீர மரணம் அடைந்த கர்னல் ராயின் உடல், நேற்று டெல்லி கண்டோன்மெண்டில் தகனம் செய்யப்பட்டது. ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் மலர் அஞ்சலி செலுத்தினார்.

ராயின் மனைவி மற்றும் பிள்ளைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இறுதி அஞ்சலி செலுத்தியது, காண்போரின் கண்களை குளம் ஆக்கியது.

Comments

all time Popular

RTGS Holidays 2015 by Resever Bank Of India